Tamilnadu

அரை நிர்வாணத்தில் திருட்டு.. காலணிகளை திருடி சந்தையில் விற்ற வட மாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது !

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில், குறிப்பாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் திருட்டு சம்பத்தை தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் நடக்கும் இருசக்கர வாகன திருட்டைத் தடுக்க இரவு நேரத்தில் ரோந்து போலிஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, குற்றச் சம்பவத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ள இந்த சூழலில், சென்னையில் மற்றொரு புதிய திருட்டு சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தினாலும், பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

அதாவது, சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் காலணிகளை திருடிய சம்பவம்தான் அது. இத்தகைய சம்பவம் கேட்கப்படும் போது நகைப்பை தந்தாலும், திருடிய காலணியை வைத்து வியாபாரம் செய்துள்ள சம்பவம் தான் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், காலணிகள் திருடப்படுவதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து, குடியிருப்பு பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அரை நிர்வாணத்தில் படிக்கட்டுகளில் தவிழ்ந்து வரும் நபர் ஒருவர் வீட்டின் வெளியே உள்ள காலணிகளை திருடியது தெரியவந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார் மற்றும் உடந்தையாக இருந்த அருள் எப்ரின் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தினார்.

இதனிடையே போலிஸார் நடத்திய விசாரனையில் காலணிகளை திருடி பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்ததை 3 பேரும் ஒப்புகொண்டனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 300 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சசம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டில் திருடி வீட்டாரிடமே Lift கேட்டு தப்பிக்க முயன்ற வட மாநில இளைஞர்.. சிக்கியது எப்படி ?