Tamilnadu

ஒன்றிய அரசுக்கும் - திராவிட மாடல் அரசுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: பட்டியலிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூரில் தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றுப் பேசியது வருமாறு:-

தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டுவதில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராகச் சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகப் பலரும் பாராட்டுகிறார்கள்.

அ.தி.மு.க ஆட்சி நடந்த 10 ஆண்டுக் காலத்தில் மின்வாரியத்தில் இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை வருடத்திலேயே ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மதம், ஜாதி, கட்சி என்று பார்க்காமல் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. மக்கள் நலத்திட்டங்களைக் கருத்தில் கொள்ளாமல் ஆட்சியை நடத்துவது என்றால் அது ஒன்றிய பா.ஜ.க அரசுதான். அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது என்றால் அது திராவிட மாடல் அரசுதான்.

வர உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை வெற்றி பெற வைத்து ஒன்றியத்தில் அடுத்த பிரதமர் யார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் கைகாட்டும் நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read: 'அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி'.. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!