Tamilnadu

BIKE RACERS கவனத்திற்கு: புத்தாண்டின்போது ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை கையாளும் யுக்தி

பொதுவாக இந்த காலத்தில் அநேகமான ஆண்கள், பைக் ஆர்வலர்களாக இருக்கின்றனர். மேலும் தங்களுக்கு பிடித்தமான விசயங்களில் முதன்மையாக அவர்களுக்கு தங்கள் பைக் தான் இருக்கும். சிலர் பைக்கை ரேஸ்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த கலாச்சாரம் வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகிறது.

இளைஞர்கள் இவ்வாறும் பைக் ரேஸில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. எனவே ரேஸ்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.

இருப்பினும் அவர்களை பொருட்படுத்தாக சிலர் பைக்கை எடுத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டுகின்றனர். அண்மையில் சென்னையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு நூதன முறையில் காவல்துறையினர் தண்டனை வழங்கினர். மேலும் அவ்வாறு செயல்களில் ஈடுபடுவோரின் பைக்கையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அதிகாலை சுமார் 1:30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் பகுதியில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பைக் ரேஸில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஸில் ஈடுபட்டவர்கள் போலிஸ் அதிகாரிகளை கண்டதும் தலைதெறிக்க தங்கள் பைக்கில் பறந்து தப்பி சென்றனர்.

இருப்பினும் விடாத காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ரேஸில் ஈடுபட்டவர்கள் பைக் அடையாளங்கள், எண்கள் தெரிந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்கிற டேவிட் (19) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி அண்ணாசாலை பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட சுமார் 6 பேர் கொண்ட கும்பலை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை அதிகாரிகள் தேடி வந்தனர். தற்போது அவர்களில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரதீப் (21), இராயப்பேட்டையைச் சேர்ந்த சையது அராபத் (21), அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற அருள் வாசன் (20) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிம்னர்த்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சியிருப்பவர்களை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில் இதுபோன்ற பைக் ரேஸ்களில் ஈடுபடுவது சில இளைஞர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்; குறிப்பாக பண்டிகை தினங்களில்.

எனவே இவற்றை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபடுவோர்கள் தங்களுக்குள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பை வைத்துக் கொண்டு அதன்மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். திடீரென பைக் ரேஸில் அவர்கள் ஈடுபடுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

எனவே சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலே அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் சென்னையில் பைக் ரேஸ் குறித்து கண்காணித்து அவர்கள் பைக் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

Also Read: “10 படங்களுக்குள் கங்கனாவுக்கு தேசிய விருது.. ஆனால் எங்களுக்கு..?” - ஒன்றிய அரசை விளாசிய ஜெயசுதா !