Tamilnadu

கலைத் திருவிழா 2022: வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு “கலையரசன், கலையரசி” விருது வழங்கும் முதல்வர்!

தமிழக கல்வித்துறையில் சமீபகாலமாக பல்வேறு புதுமைகள் அரங்கேறி வருகிறது. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபடத் தொடங்கியுள்ளன.

அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு கல்லூரிகளில் ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.

அனைத்து மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘கலைத்திருவிழா’ திட்டமும் மாணவர்கள் சமுதாயத்தை மறுமலர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பேச்சு, ஓவியம் உள்ளிட்ட கலைத்திறமைகள் கொண்ட மாணவர்கள் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் பள்ளியில் படிக்கும் காலத்திலே இனி சூரியனாக பிரகாசிக்க முடியும்.

"மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழா திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், 2022- 23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் டிசம்பர் 27 (நாளை) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வகுப்பு வாரியாக 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

அந்த வகையில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் அனைத்து வகை போட்டிகளும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோயம்புத்தூரில் அனைத்து வகை போட்டிகளும் நடைபெற உள்ளன.

அதே போல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருவள்ளூரில் நுண்கலை, நாடகம் மற்றும் மொழித்திறன் போட்டிகளும், காஞ்சிபுரத்தில் இசை, கருவி இசை, இசை சங்கமம் உள்ளிட்ட போட்டிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடன போட்டிகளும் நடைபெற உள்ளன.

மாவட்ட அளவில் மூன்று பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை 36 மாவட்டங்களில் இருந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பொறுப்பு ஆசிரியர் துணையுடன் அழைத்து வர ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கவுள்ளார்.

Also Read: “ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்” : ‘Dash board’ ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!