Tamilnadu

800 அரங்குகள்.. ஜனவரி 6ம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மட்டும் ஒரு ஆண்டு தடைப்பட்டது. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

இந்த சென்னை புத்தகக் கண்காட்சிதான் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியாக நடைபெறும். இதனால் புத்தக வாசிப்பாளர்கள் எங்கிருந்தாலும் சென்னைக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். மேலும் புத்தகங்கள் மட்டும் இல்லாமல் கலைநிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்நிலையில் 46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். இதுகுறித்து பபாசி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது வருமாறு:-

46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், தொடக்க விழாவின் போது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

இந்த புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 800க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்பட்டுக் கடந்த ஆண்டு காட்டிலும் சிறப்பாக இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியானது நடைபெற உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்கப்பட உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழக அரசு அறிவுறுத்தல் படி வாசகர்கள் பாதுகாப்பு கருதி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Also Read: “பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வழிகாட்டியாக திகழ்கிறார் தோழர் நல்லகண்ணு ”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!