Tamilnadu

சென்னை வந்த ஹாக்கி உலகக் கோப்பை.. அமைச்சர் உதயநிதியிடம் ஒப்படைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒடிசா மாநிலம், புவனேஷ்வர்- ரூர்கேலாவில் 13.01.2023 முதல் 29.01.2023 வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் (2023 Men's FIH Hockey World Cup) நடைபெறுகிறது. இந்த போட்டியை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கோப்பை பயணம் செய்து வருகிறது.

அந்த வகையில் ஹாக்கி உலகக் கோப்பை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தது. இந்த ஹாக்கி உலகக் கோப்பைக்குச் சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

ஹாக்கி உலகக்கோப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மேலும் பிரபலப்படுத்தும் வகையில், உலகக்கோப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து, உலகக் கோப்பையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இக்கோப்பையானது, தமிழ்நாட்டின் முன்னணி ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோரால் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்திற்கு கொண்டுவரப்படும். அங்கு, பாரம்பரிய முறையில் மேள தாளங்கள் முழங்க கோப்பைக்கும் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.

பின்னர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மற்றும் காவல்துறை அணிகளிடையே சிறப்பு கண்காட்சி போட்டி நடைபெறவுள்ளது. கண்கவர் கலைநிகழ்சிகளும் நடைபெறவுள்ளன.

அதனையடுத்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி உலகக் கோப்பையை கேரளா ஹாக்கி நிர்வாகிகளிடம் வழங்குவார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடடெங்கும் அடுத்த 15 நாட்களில் 100 பள்ளிகளில் விழிப்புணர்வு ஹாக்கி போட்டிகளை இந்திய ஹாக்கி அமைப்பு, தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கழக ஆட்சியில் முதன்மையாக திகழும் தமிழ்நாடு.. தமிழினத்தை வாழ்விக்கும் சொல்தான் ’திராவிட மாடல்’.. முரசொலி !