Tamilnadu

“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்துள்ளது; மதியத்திற்குள் நிலைமை சீராகும்” - அமைச்சர் KKSSR

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே நேற்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து நேற்றைய முன்தினம் இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் என 6 மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதோடு இதன் தொடர்ச்சியாக மாண்டஸ் புயலை முன்னிட்டு சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு புயலுடன் கூடிய கனமழை பெய்தது.

அதோடு இந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை வந்தாலும், புயல் வந்தாலும் இந்த அரசு சந்திக்க தயாராக உள்ளதாக என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. எனவே நீர்நிலைகள் நிரம்பி தண்ணீரை திறக்க வேண்டிய நிலைமை இல்லை. போக்குவரத்து தடை எங்கெல்லாம் இருக்கிறதோ அதை சீராக இயங்க வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மின்சாரமும் தடை நீங்கி சீராக இயங்க தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நேற்று வீசிய புயல் காற்றின் காரணமாக சில இடங்களில் மரம் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகளில் நேற்று இரவு முதலே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாநகராட்சி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று மதியத்திற்குள் அனைத்து இடங்களும் இயல்பு நிலைக்கு மாறும். முதலமைச்சரின் நேரடி பார்வையில் அனைத்தும் இயங்குவதால் சேதங்கள் பெரும் அளவில் இல்லை. படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மதியத்திற்குள் முழுமையான சேத விவரங்கள் தெரியவரும். மழையே வேண்டாம் என்றால், குடிநீருக்கு என்ன செய்வோம்? எனவே மழை பெய்தால் தான் நல்லது. எவ்வளவு பெரிய மழை, புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் ஓரிரு நாளில் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றே முதலமைச்சர் ஒரு சில இடங்களில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்" என்றார்.

Also Read: நிறுத்திவைக்கப்பட்ட மின்விநியோகம் மதியத்துக்குள் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி !