Tamilnadu

மடிக்கணினி வழங்குமாறு கோரிக்கை விடுத்த திருநங்கை .. கூட்டம் முடியும்முன் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்!

நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரின் முயற்சியால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருநங்கைகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் முன்வைத்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சௌபர்ணிகா என்பவர் ஆட்சியர் முன் தனது கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு கூறினார்.

அவர் கூறுகையில், தான் பழைய பேட்டை பகுதியில் உள்ள ராணி அண்ணா கல்லுரியில் படித்து வருவதாகவும், தனது வள்ளியூரில் இருந்து தினமும் பழைய பேட்டை பகுதியில் உள்ள கல்லூரிக்கு வந்து செல்வதற்கான இலவச பேருந்து பயண அட்டை, திருநங்கைகளுக்கான கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பெண்கள் கல்லூரியில் படித்து வரும் நிலையிலும் ஆண் பெயராக இருக்கும் தனது பெயரை மாற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், தனக்கு கல்லூரி படிப்புக்கு தேவையான மடிகணினி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவு பெறக்கூடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் திருநங்கை சௌபரணிகாவை அழைத்து அனைவர் முன்னிலையிலும் அவருக்கு மடிக்கணினி வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். அவரின் இந்த செயல் அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read: "தி.மு.க என்பது கட்சி அல்ல மக்கள் இயக்கம்".. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி பேச்சு!