Tamilnadu

மனம் திருந்திய நக்சலைட் பெண்.. ஆவின் பாலகம் அமைத்து மறுவாழ்வு கொடுத்த மாவட்ட ஆட்சியர்!

வேலூர் மாவட்டம், அரியூரில் நக்சலைட்டாக பெண் தலைவியாக இருந்த பிரபா என்ற பெண் மனம் திருந்தி கடந்த ஆண்டு சரணடைந்தார். இதையடுத்து காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து பிரபாவுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் நோக்கில், அரியூர் முறுக்கேரியில் கிராமத்தில் ஆவின் பாலகம் ஒன்று அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து வேலூர் சாலை அரியூரில் ஆவின் பாலகம் அமைத்துக் கொடுத்து அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். க்யூபிரிவு கண்காணிப்பாளர் கண்ணம்மாள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இத்திறப்புவிழாவில் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பிரிபா போன்று மனம் திருந்தி வருபவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் அனைத்து நல திட்ட உதவிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மனம் திருந்தி வந்த நக்சலைட் பெண்ணுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் பாலகம் அமைத்துக் கொடுப்பது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாடு அரசின் இந்த நல்ல முயற்சிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: ஆர்டர் செய்ததோ ஜீன்ஸ் பேண்ட்.. வந்ததோ பை நிறைய வெங்காயம்: அதிர்ச்சியடைந்த இளம் பெண்!