Tamilnadu

“ஒருவர் கூட தப்பமுடியாது; யார், யார் குற்றவாளிகளோ அவர்களெல்லாம் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்”: முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (19-10-2022) அரசினர் தீர்மானத்தினை முன்மொழிந்தும், பல்வேறு உறுப்பினர்கள் உரையாற்றியதற்குப் பிறகு பதிலளித்தும் உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், “நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நம்முடைய கழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதைப்பற்றி இங்கே பேசிய பல உறுப்பினர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

போராட்டத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில்கொண்டு, 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

இங்கேகூட பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதைப் பற்றி அழுத்தத்தோடு சொன்னீர்கள். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுதலாக 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 30-5-2018 அன்று இறந்த பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப் பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக "தடையில்லாச் சான்றிதழ்" வழங்குவதற்கு நாம் ஆணையிட்டோம். இவையெல்லாம் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடந்தவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 26-5-2021 அன்று நாம் உத்தரவிட்டு, அந்த ஆணைகளை வழங்கியிருக்கிறோம். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபர்களுக்கு கடந்த ஆட்சியில் கண்துடைப்பாக சில பணிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் படிப்பு, தகுதிக்கு ஏற்ற பணிகளைக் கேட்டார்கள்.

அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை, காதில் போட்டுக் கொள்ளவுமில்லை. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப பணியிடங்கள் 18 நபர்களுக்கு கடந்த 21-5-2021 அன்று வழங்கப்பட்டன. விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையினை 18-5-2022 அன்று அரசிடம் அளித்தது.

அந்த ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை, அந்தப் பரிந்துரைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்தது; இன்னும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், கலவரத்தை கையாண்ட முறை, கலவரத்திற்குப் பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆணையத்தின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த விசாரணை அறிக்கை குறித்து 29-8-2022 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் விவாதித்தோம். அந்த அடிப்படையிலேதான் இந்த அவையில்கூட அந்த அறிக்கையை நாம் தாக்கல் செய்தோம்.

ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அதனுடைய விவரத்தை இந்த அவைக்கு நான் இப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

* தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர்மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

* அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(B)–ன்கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

* உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

* இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த அவையினுடைய கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கைக் காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனிதத் தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும்.

அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஏதோ இப்பொழுது சொல்கிற உறுதிமொழி அல்ல; ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிதான்.

யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதை மாத்திரம் தெரிவித்து, என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்.

Also Read: “மாணவர்களுக்கு புதிய வகுப்பறைகள்.. 6,000 கி.மீ சாலைகள்”: 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்புகள் என்ன?