Tamilnadu

“கோட்சேவால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட RSS அனுமதி கேட்கமுடியாது”: காவல்துறை வாதம்!

அக்டோபர் 2 தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து அரசு அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறையின் கடமை என்று பல முறை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாகவும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழகத்தில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் தமிழக காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என காவல்துறை கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். தவறாக உருவகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். நாதுராம் கோட்சேவை ஒரு கையில் ஏந்துபவர்களாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்க முடியாது என்றும், அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்தே அமைச்சர் கலந்து கொள்ளக் கூடிய உள்ளரங்கு கூட்டத்திற்கே அனுமதி மறுக்கப்பட்டு நிலையில் ஊர்வலத்தை எப்படி அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பிய போது, அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பில் தற்போதைய சூழலில் அன்றைய தினத்திற்கு பதிலாக மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Also Read: RSS ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் உத்தரவு சரியானது - ஐகோர்ட் உத்தரவில் சொல்லியிருப்பது என்ன?