Tamilnadu

நைஜீரியாவில் தலைமறைவு.. 15 ஆண்டுக்கு பிறகு நாடு திரும்பிய குற்றவாளி - மடக்கி பிடித்த ஏர்போர்ட் போலிஸ்!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (46). இவர் மீது 2007 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ராமலிங்கத்தை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, மகளிர் போலிஸார் தேடினா்.

ஆனால் ராமலிங்கம் போலிஸிடம் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பியோடி, தலைமறைவாகிவிட்டார். இதை அடுத்து கடலூர் மாவட்ட போலிஸ் சூப்பரண்டண்ட், ராமலிங்கத்தை 2007 ஆம் ஆண்டில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போட்டு வைத்திருந்தார். ஆனால் 15 ஆண்டுகள் தொடர்ந்து ராமலிங்கம் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்த நிலையில்

இந்த நிலையில், இன்று அதிகாலை கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்து பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது அதே விமானத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைமுறைவான ராமலிங்கமும், நைஜீரியாவில் இருந்து கத்தார் நாடு வழியாக, அந்த விமானத்தில் சென்னைக்கு வந்தாா். குடியுரிமை அதிகாரிகள் சோதனையில், இவர் கடலூர் மாவட்ட போலிஸாரால் வரதட்சணை கொடுமை வழக்கில், 15 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், ராமலிங்கத்தை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கடலூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் கொடுத்தனர்.கடலூா் மாவட்ட தனிப்படை போலிஸார், ராமலிங்கத்தை கைது செய்து அழைத்து செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனா்.

கடலூா் மாவட்ட போலிஸால் வரதட்சனை கொடுமை வழக்கில், 15 ஆண்டுகளாக நைஜீரியா நாட்டில் தலைமறைவாக இருந்த, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஏா்பஸ் A-380 ரக பெரிய விமானங்கள் வந்துச்செல்ல சிறப்பு ஏற்பாடு : உலக தரத்திற்கு உயரும் சென்னை ஏர்போர்ட் !