Tamilnadu

மாடலிங் செய்யும் பெண்களே உஷார்.! - கவர்ச்சி புகைப்படத்தை வைத்து மிரட்டி வந்த திருச்சி இளைஞர் கைது !

கடந்த ஆண்டு சென்னை வேப்பேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வந்துள்ளார். மேலும் தனக்கு மாடலிங் மீது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை கண்ட மர்ம நபர் ஒருவர் அவரிடம் மாடலிங்கில் பெரிய ஆளாக மாற்றுவதாக கூறி பேசியுள்ளார். அப்படியே அவரது மொபைல் எண்ணையும் பெற்றுள்ளார்.

மேலும் அவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ராஜெக்ட்டுக்கு இந்திய அழகிகள் தேவை என்றும் அதற்காக தங்களது கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்புமாறும் கேட்டுள்ளார். இந்த இளம்பெண்ணும் அதனை நம்பி தனது புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எதற்காக என்று கேட்டபோது, "ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும்; அப்படி இல்லை என்றால் உனது புகைப்படங்களை நேரடியாகவும், மார்பிங் செய்தும் இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அதிகாரிகள் இதனை விசாரித்து வந்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அந்த இளம்பெண்ணை மிரட்டி வந்தது திருப்பூரை சேர்ந்த ரஞ்சித் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஏற்கெனவே சென்னை கொளத்தூர் பகுதியில் இதேபோன்று மாடலிங் செய்து வரும் ஒரு இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தற்பொழுது ரஞ்சித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறி வைத்து அவர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Amazon நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?