Tamilnadu
ரூ.600 கோடி.. மாட்டுத் தாவணியில் Tidal Park: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் மதுரை மக்கள் மகிழ்ச்சி!
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர்.
கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சென்னையில் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தினுடைய தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகருக்கு எடுத்துச் செல்ல, டைடல் நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கியதுடன், திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் New Tidal பூங்காக்களை நமது அரசு உருவாக்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் FINTECH போன்ற அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து SPB மூலம் ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிட்டெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.
மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத் தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், ஐந்து ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் FINTECH மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அது வழி வகுக்கும். முதல் கட்டத்தில், 10,000 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுவாக தொழில் வளர்ச்சி என்பதை அந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியாக மட்டும் நாங்கள் பார்ப்பது இல்லை. அதன் மூலமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. எனவே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வளர்ச்சியாகவே நாம் பார்க்கிறோம்" என தெவித்துள்ளார்.
மதுரை மாட்டுத் தாவணியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து பலரும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
"மதுரை மற்றும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது. மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்டியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!