Tamilnadu
"இனி ஜாலியாக பள்ளிக்கு செல்வேன்., இனி என்னை யாரும் ஒதுக்க மாட்டார்கள்"- மகிழ்ச்சியில் சிறுமி தான்யா !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள்,மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் மூத்த மகள் டானியா (9). இவர் டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகள் போல் டானியாவும் மூன்று வயது வரை இயல்பாக வளர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு முகத்தில் கரும்புள்ளி போன்று தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.
ஆனால் இது சரியாகவில்லை. பின்னர்தான் இது முக சிதைவு நோய் என்று பெற்றோர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாகப் பல மருத்துவர்களைப் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் சிறுமிக்கு சரியாகவில்லை. மேலும் பல லட்சங்களை சிகிச்சைக்காக பெற்றோர்கள் செலவழித்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது பற்றி அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸும் சிறுமியை நேரில் சந்தித்து 'உனக்கு அரசு உதவியாக இருக்கும்' என உறுதியளித்தார். அதன்பின்னர் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுமியின் சிகிச்சையை மேற்கொள்ளவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுமிக்கு அறுவை சிகிச்சை சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதன்பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, குழந்தையுடன் உரையாடினார்.
பின்னர் சிறுமியின் அறுவைசிகிச்சைக்கு பிந்தைய புகைப்படத்தை சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், சிறுமியின் முகம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சிறுமி தான்யா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறுமி , ""என் கன்னம் சரியாகிவிட்டது. நான் வீட்டிற்கு செல்லவுள்ளேன். இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பள்ளிக்கு சென்று படித்து, முதலமைச்சரின் பெயரை காப்பாற்றுவேன்.
இனி ஜாலியாக பள்ளிக்கு செல்வேன். இனி என்னை யாரும் ஒதுக்க மாட்டார்கள். டாக்டராவதே என் கனவு. அமைச்சர் நாசர் என்னை ஒருநாள் தவறாமல் வந்துபார்த்தார். முதலமைச்சரும் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்று தெரிவித்தார். சிறுமி தான்யாவின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!