Tamilnadu
”சமூக நல்லிணக்க விழாவாக இருக்கும் ஓணம்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்து!
கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (செப்டம்பர்-8) கொண்டாடப்பட இருக்கிறது.
நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.
அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம்.
"மாயோன் மேய ஓண நன்னாள்" எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிடநிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா.
கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது.
அத்தகைய திருநாளைத் தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!