Tamilnadu

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. மைனா பட பாணியில் சேலையால் மீட்கப்பட்ட பயணிகள்.. திக்திக் சம்பவம்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா பேருந்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் கொடைக்கானலுக்கு சென்ற அவர்கள் அங்கு இரண்டு நாள் இருந்தவர்கள் இன்று காலை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது பேருந்தின் ஓட்டுநர் டம் டம் பாறை அருகே பேருந்தை நிறுத்தி வெளியே சென்றுள்ளார். ஆனால், மலை பாதையில் பேருந்தை சரியான நிறுத்தாததால் பேருந்து பள்ளத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபாயகுரல் எழுப்பியுள்ளனர்.

பள்ளத்தில் தொடர்ந்து சென்ற பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பயணிகளின் கூச்சல் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் மைனா பட பாணியில், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதன் வழியாக சேலையை கட்டி உள்ளிருந்த 40 பயணிகளையும் மீட்டனர்.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவஇடத்துக்கு வந்த போலிஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பயணிகளை பத்திரமாக மீட்ட பொதுமக்களை போலிஸார் பாராட்டினர்.

பின்னர் விசாரணையில் அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பேருந்து பள்ளத்தில் கீழே செல்லாமல் மரங்களுக்கு இடையில் சிக்கியது தெரியவந்தது. அந்த பகுதியில் நடக்கவிருந்த மிக்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

Also Read: மோசமான பணவீக்கத்தில் இலங்கைக்கு 5-வது இடம்.. இந்தியாவின் நிலை என்ன ? -வெளிவந்த உலக வங்கி அறிக்கை !