Tamilnadu
Fed வங்கியில் கொள்ளையடித்தவர் யார்? அவர்கள் கொள்ளையடித்தது எப்படி ? -காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்!
ஃபெடரல் வங்கியின் ஒரு பகுதியான ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன்ஸ்-ல் தங்க நகைகளுக்கான நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் சென்னை, அரும்பாக்கம் கிளையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சில கும்பல் ரூ.20 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தை அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடத்தியுள்ளார். அதாவது வங்கி காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கட்டிபோட்டுவிட்டு, மற்ற ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று கொள்ளையில் ஈடுபட்ட முருகனின் கூட்டாளிகளான பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 18 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான முருகன் என்பவர் திருமங்கலத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்த கொள்ளை சம்பவத்தை பற்றி கூறினார்.
அதாவது, "இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் பாதி பேரை கைது செய்துவிட்டோம். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை தவிர இன்னும் 2 - 3 பேர் இருக்கின்றனர். அவர்களை விரைவாக கைது செய்துவிடுவோம். தற்போது வரை 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகளை இன்னும் 2- 3 நாட்களில் கைப்பற்றி விடுவோம்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் ஆவர். அவர்களில் முருகன் இந்த வங்கியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். எனவே அவருக்கு எந்த நகை, எங்கு - எவ்வளவு இருக்கும், யார் யாரெல்லாம் வங்கிக்கு வருவார் என்பதெல்லாம் தெரிந்துள்ளது. எனவே அவர் இதை எளிதாக செய்து முடித்துவிட்டார்.
அந்த கும்பலில் சூர்யா என்ற இளைஞர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சில ஊடகங்களில் வருவது போல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கியெல்லாம் பயன்படுத்தவில்லை. கத்தியை மட்டும் மிரட்டுவதாக பயன்படுத்தியுள்ளனர்.
வங்கியின் காவலாளி மயக்கமடைந்ததாக கூறுகிறார்; ஆனால் சிசிடிவி-யில் அவர் மயக்கமடைந்து போல் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. எனவே அவர் குடித்த குளிர்பானத்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். வங்கியில் எச்சரிக்கை மணி ஒலிக்காதது குறித்து விசாரணை நடைபெறுகிறது. விரைவில் தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களும் பிடிபட்டு விடுவர்" என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!