Tamilnadu
“டாரஸ் லாரி - சரக்கு லாரி மோதி கோர விபத்து.. தீயில் கருகி இரண்டு பேர் பலி” - திருச்சி அருகே நடந்த சோகம்!
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலையின் உதிரி பாகங்களை இறக்கி விட்டு டாரஸ் லாரி ஒன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி எதிர் சாலையான திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நிகழ்ந்த உடன் டாரஸ் லாரியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் இரண்டு லாரிகளிலும் தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக இது பற்றிய தகவலை துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் டாரஸ் லாரியில் இருந்த ஒருவர் உடலில் பற்றி எரியும் நெருப்புடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததை அடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இரண்டு தீயணைப்பு வாகனங்களும் கடுமையாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதன் பின்னர் தான் டாரஸ் லாரிக்குள் சிக்கி இருந்த மற்றொருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. கிரேன் உதவியுடன் லாரியில் சிக்கி இருந்தவரின் உடல் மீட்கப்பட்டது.
உயிரிழந்த இருவரும் உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியை சேர்ந்த இந்திர மணிபால் (37) (டாரஸ் லாரி ஓட்டுநர்), உதவியாளர் பவன் பட்டேல் (25) ஆகியோர் என்பது தெரியவந்ததை அடுத்து இருவரின் உடல்களையும் துவரங்குறிச்சி போலிஸார் மீட்டு பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டபட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி அம்பிகா, கூடுதல் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!
-
11 சவரன் நகை திருட்டு வழக்கு : த.வெ.க பெண் நிர்வாகி கைது!
-
”சொந்தக் கட்சிக்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்ட பழனிசாமி” : முரசொலி!
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!