Tamilnadu

இந்தியாவின் 75-வது செஸ் GRAND MASTER ஆன தமிழ்நாட்டு சிறுவன்.. யார் இந்த பிரணவ் வெங்கடேஷ் ?

இந்தியாவின் 75-வது செஸ் GRAND MASTER ஆனார், தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதுடைய பிரணவ் வெங்கடேஷ். சென்னையை சேர்ந்தவர் பிரணவ் வெங்கடேஷ். இவர் தனது 5 வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த பேட்டி ஒன்றில், தனது மகனுக்கு 5 வயது இருக்கும்போது உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றோம்.

அங்கு அவர்கள் செஸ் விளையாடி கொண்டிருந்தனர். செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் காய்கள் விலங்குகள் உருவத்தில் இருப்பதை பார்த்த பிரணவ், அதன்மீது ஈர்ப்பு வந்துள்ளது என்றார்.

அப்போதிலிருந்து விளையாட தொடங்கிய பிரணவ் பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றார். இவர் தனது 10 வயதில் 2233 புள்ளிகள் பெற்று அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது 16 வயதில் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்று 2500 புள்ளிகளை தாண்டி GRAND MASTER பட்டத்தை வென்றுள்ளார் பிரணவ் வெங்கடேஷ். ஏற்கனவே இந்தியாவில் 74 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள நிலையில், இவர் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆக திகழ்கிறார். இந்த 75 பேரில், 27 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "2 மாதங்களுக்கு 144 தடை.. 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு .." - என்ன நடக்கிறது மணிப்பூரில் ?