Tamilnadu

சென்னைக்கு புதிய Airport.. எங்கே இருக்கிறது பரந்தூர் : என்னென்ன புதிய அம்சங்கள் அங்கே ?

இந்தியாவில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 விமான நிலையங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்த 5 விமான நிலையங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் விமான நிலையங்களின் அளவு, சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படவில்லை.

சென்னை விமான நிலையம் தற்போது சுமார் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி நடந்து வந்தாலும், அதுவும் குறுகிய அளவில்தான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம், சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு, தற்போதைய விமான நிலையத்தில் போதுமான இட வசதிகள் இல்லை. கூடுதல் நிலங்களை கையகப்படுத்துவதற்கும் முடியாத நிலை உள்ளது.

எனவே சென்னைக்கு அருகே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த புதிய கிரீன்பீல்ட் விமான நிலையத்தை அமைப்பது தான் ஒரே வழி என்று ஒன்றிய அரசும், மாநில அரசும் கருதின. மாநில அரசு அதற்கான தகுதியான இடத்தை அடையாளம் காட்டும் படி, ஒன்றிய அரசு கூறியது.

இதை அடுத்து மாநில அரசு, செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே உள்ள படாளம், மற்றும் திருப்போரூர் ஆகிய இரண்டு இடங்களையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூா், பண்ணூா் ஆகிய இரண்டு இடங்களையும் மொத்தம் 4 இடங்களை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

ஒன்றிய அரசின் நிபுணர் குழுவினர் வந்து, இந்த 4 இடங்களையும் ஆய்வு செய்தனர். பின்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மற்றும் படாளம் ஆகிய இரண்டு பகுதிகளில் விமான நிலையம் அமைப்பதற்கு தகுதியான வசதிகள் இல்லாத இடம் என்று நிராகரித்து விட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவாசத்திரம் அருகே உள்ள பன்னூர், பரந்தூா் ஆகிய இரண்டு இடங்களை மட்டும் ஆய்வில் எடுத்துக்கொண்டனர். இந்த 2 இடங்களிலும் ஆய்வு பணிகள் ஏற்கனவே நடந்து வந்தன.

இது சம்பந்தமாக மாநில தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி சென்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சா் உடன் ஆலோசனையும் நடத்திவிட்டு வந்தார். அப்போதும் பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக இன்று டெல்லி மாநிலங்களவையில், தி.மு.க எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், பரந்தூரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணியை மாநில அரசின் தொழில் முதலீட்டு கழகமான, டிட்கோ ஆய்வு பணியை ஏற்கனவே முடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் அடங்கியுள்ள பரந்தூா் ஊராட்சி, மற்றும் அதை ஒட்டியுள்ள வளத்தூர், ஏகானத்தூர், அக்கம்மாபுரம், தண்டலம், மடப்புரம் ஆகிய கிராமங்களில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

7 கிலோ மீட்டர் நீளம், 4 கிலோ மீட்டர் அகலம் பரப்பில் 7,000 ஏக்கர் நிலம் இதற்காக தயார் நிலையில் உள்ளது. இங்கு பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. தனியார் பட்டா நிலங்கள் மிகக் குறைவாகவே இருப்பதால், நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் ஏற்படாது, என்று மாநில அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் பரந்தூரில் பெரிய கட்டிடங்கள், செல்போன் டவர்கள், மின் கோபுரங்கள் போன்றவைகள் அதிக அளவில் இல்லை. எனவே இங்கு புதிய கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைத்தால் விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படுவதில் பிரச்சனைகள் ஏற்படாது.

மேலும் சென்னையில் இருந்து 1.49 நிமிடங்கள் ஆகும் எனவும் சுமார் 60 கிலோ மீட்டல் தொலைவில் அந்த இடம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய விமான நிலையம் செல்ல 1.5 மணி நேரமாகும், சுமார் 75 கி.மீ தூரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முதல் கட்டமான 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படும் எனவும் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் கட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரே நாளில் 500 விமானங்கள் கையாண்டு சாதனை படைத்தது. மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை மூன்றாவது இடத்தில் அந்த சாதனையை படைத்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கு போன்றவைகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு குறைந்தாலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 400 விமானங்களுக்கு அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 500ஐயும் தாண்டி, அதிக விமான சேவைகள் இயக்கம் பட இருக்கிறது.

அதை போல் கொரோனாவுக்கு முன்னால், சென்னை விமான நிலையத்தில் ஒரு நாளுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் சேர்த்து சுமார் நாளொன்றுக்கு 30,000 பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது விமானங்களில் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இது 50,000 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே இவைகளையெல்லாம் பார்க்கும் போது சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பது மிக மிக அவசியம் ஆகும். இதனால் தான் மாநில அரசும் ஒன்றிய அரசும், இரண்டாவது விமானத்தை நிலையத்தை அமைப்பதில் இவ்வளவு ஆர்வம் உடன் செயல்பட்டு வருகின்றன. அதிலும் தமிழகத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு, சென்னைக்கு இரண்டாவது புதிய விமானநிலையம் அமைப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகிறாா்.

மேலும் இரண்டாவது விமானநிலையம் அமைவதால்,சென்னை தற்போதைய விமானநிலையத்தில் விமானங்கள் மற்றும் பயணிகளின் நெரிசல்கள் குறையும். அதோடு சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களும் பெருமளவு குறையும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.

Also Read: முதல்வரின் தொடர் முயற்சி.. சென்னையில் 2வது கிரீன்பீல்டு விமானநிலையம் : பரந்தூரில் இடம் தேர்வானது எப்படி?