Tamilnadu
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு : தாளாளர் உட்பட 5 ஆசிரியர்கள் மற்றும் 128 பேர் சிறையில் அடைப்பு !
கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.
இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கனியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், மற்றும் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு போலிஸார் நேற்று இரவு ஆஜர் படுத்தினர். இதனையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரையும் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார்.
தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கனியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலவரத்திற்கு காரணமான 20 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 108 பேர் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டமாக 113 பேர் ஆஜர் படுத்தப்பட்டு மொத்தமாக 221 பேரையும் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 221 பேரும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலிசார் அழைத்து சென்றனர். 20 சிறார்கள் செஞ்சி கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். தொடர்ந்து இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!