Tamilnadu

மின் கட்டணத்தில் என்னென்ன மாற்றங்கள்? அமைச்சர் பேச்சில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் !

தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது வருமாறு:-

தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும். நிலைக்கட்டணம் வரும் காலங்களில் வசூலிக்கப்படாது. ஒரு மாதத்திற்கு 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 காசு மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

அதேபோல், 300 - 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் 501 -600 யூனிட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 அதிகரிக்கக் கூடும். மேலும் 601 - 700 யூனிட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்த்தப்படும்.

சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read: மின்கட்டண உயர்வு ஏன்? எப்படி? ஒன்றிய அரசின் அழுத்தமே காரணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி!