Tamilnadu

"அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே வன்முறை நடந்துள்ளது".. ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளியில் இன்று அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வன்முறையின் போது காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் போலிஸாரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர்கள் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தனர். பிறகு அமைச்சர்கள் மூன்று பேரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "மாணவி மரணமடைந்த மறுநாளே அமைச்சர் சி.வி.கணேசன் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டபோதும் மாணவர்கள், பெற்றோருக்களை போலிஸார் பாதுகாத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்ட தகவலால்தான் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 67 வாகனங்கள், 48 இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளது. 108 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்

மேலும் 3000 மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. நியாயம் கேட்கப் போனவர்கள் இதுபோன்ற செயல்களிலா ஈடுபடுவார்கள். ஜனநாயக முறையில் போராட நினைத்திருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாம்.

நாளை மாணவியின் குடும்பத்தினர் வந்தவுடன் உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. மாணவியின் பெற்றோரின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். அரசுக்கு சில கெட்டப் பெயர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 288 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் கைது நடவடிக்கை தொடரும். நாளை முதலமைச்சரைச் சந்தித்து இந்த வன்முறை சம்பந்தமாகத் தகவல் தெரிவிக்க இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை !