Tamilnadu
மரம் விழுந்ததால் தடைபட்ட போக்குவரத்து.. ஆம்புலன்சில் குழந்தை பெற்ற கர்ப்பிணி..ஊட்டியில் நெகிழ்ச்சி!
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூடலூர் அருகிலுள்ள கோக்கால் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை கூடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஊட்டியில் உள்ள சேட் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு கூடலூரிலிருந்து ஊட்டிக்கு கர்ப்பிணி திவ்யா கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற ஆம்புலன்ஸ் ஆகாசபாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே ராட்சத யூக்கலிப்டஸ் மரம் ஒன்று விழுந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரத்தை அப்புறப்படுத்த அங்கிருந்தவர்கள் முயன்ற நிலையில், திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு ஆம்புலன்சில் பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மருத்துவ டெக்னீஷியன்கள் ரதீஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் திவ்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அந்த ஆம்புலன்சில் திவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதன் பின்னர் சாலையில் இருந்த மரம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், திவ்யா அம்புலன்ஸ் மூலம், கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாயும்,சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!