Tamilnadu

உணவுப் பாதுகாப்பு துறைக்கு வந்த புகார்.. தரமற்ற உணவு தயாரித்த பிரபல ஹோட்டலை இழுத்து மூடிய அதிகாரிகள்!

திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியார் அசைவ உணவகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த அப்பா- மகன் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உத்தரவின் பெயரில், திருப்பெரும்புதூர் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனியார் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டார்.

இதில், உணவகத்தின் சமையலறை மற்றும் உணவு செய்யும் விதம் இறைச்சி வைக்கும் பிரிசர் பாக்ஸ் என அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அந்த உணவகத்தை இரண்டு நாட்களுக்கு மூட உத்தரவிட்டார். மேற்கண்ட குறைபாடுகள் சரி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிரபல தனியார் உணவகத்தை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்கு மூட செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதல் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை.. பெற்ற மகனின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை - பகீர் சம்பவம் !