Tamilnadu

டெல்லியில் துப்பாக்கி முனையில் திண்டுக்கல் தொழிலதிபர் கடத்தல்.. அதிரடியாக மீட்ட தமிழ்நாடு போலிஸ்!

திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.வில்வபதி. இவர் நூற்பாலை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு அண்மையில் டெல்லியிலிருந்து ஒருவர் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.

அப்போது அந்த நபர், வங்காள தேசத்துக்கு 50 டன் நூல் தேவைப்படுகிறது. இதனால் ஒரு கோடிக்கு வியாபாரம் நடக்கும் என கூறியுள்ளார். இதை நம்பி வில்வபதியும் வியாபாரம் தொடர்பாக அந்த நபருடன் அடுத்தடுத்து பேசிவந்துள்ளார்.

இதையடுத்து, இந்த வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வோம் டெல்லி வாருங்கள் என அந்த நபர் வில்வபதியை அழைத்துள்ளார். இதனால் கடந்த 7ம் தேதி டெல்லி சென்றுள்ளார். அங்கு வில்வபதியை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது. பின்னர் அவரை அந்த கும்பல் துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது.

இதனால் வில்வபதி, திண்டுக்கல்லில் உள்ள தன் மகளின் மாமனாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அவசரமாக ரூ. 50 லட்சம் பணம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார். இவரின் பேச்சில் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை போலிஸார் விசாரித்தபோது வில்வபதியை வியாபாரம் செய்வதாகக் கூறி அரியானாவிற்கு அவரை கடத்தியது தெரியவந்து. உடனே டெல்லி, அரியானா போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி போலிஸார் அந்த கும்பலை தேடியுள்ளனர். அப்போது டெல்லி ஹியாம் நகரில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலிஸார் சுற்றிவலைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் இருந்த வில்வபதி, வினோத்குமார் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

புகார் கொடுத்தவுடன் திண்டுக்கல் போலிஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைபடி டெல்லி போலிஸாரை தொடர்பு கொண்டு தொழிலதிபர் வில்வபதியை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ரயிலை யாரோ கடத்துறாங்க.. காப்பாத்துங்க..” : வழிமாறி சென்ற ரயிலால் பதறிபோன பயணிகள் - என்ன ஆனது ?