Tamilnadu

"அவர்கள் செய்த முறைகேடுகள் தான் காரணம்.." -அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டுக்கு அமைச்சர் விளக்கம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டம் வரைபடம் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்றும், அதனை தொடர்ந்து கட்டுமானத்திற்கு ஒப்பந்தம் கோரப்படவுள்ளது என்றும், இன்னும் 5 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுற்று சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மதுரை மாவட்டம், மாநில அளவில் பின்தங்கி உள்ளதாகவும், அதனை மாற்ற இதுபோன்ற மெகா தடுப்பூசி முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு குறித்த கேள்விக்கு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு துறைகளில் முன்னாள் அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதன் காரணமாகத்தான் தற்போது காவல்துறை அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Also Read: சுரங்கப்பாதை நீரில் சிக்கிய பள்ளி பேருந்து.. மாணவர்களை துரிதமாக மீட்ட பொதுமக்கள் - பெருகும் பாராட்டு!