Tamilnadu
டூவிலரை அகற்றாமல் சாலை அமைத்த விவகாரம் : உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் - அதிரடி நடவடிக்கை எடுத்த ஆணையர்!
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் பேரி காளியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் டயர்கள் மேல் சிமெண்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது.
இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த பணிகளுக்கு பொறுப்பாளராக இருந்த 3-வது மண்டல உதவி பொறியாளர் பழனி மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவின் பெயரில், உதவி பொறியாளர் பழனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல், இந்த பணியை செய்த தனியார் நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிக்க தனியார் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்ட திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடந்த சாலை பணிகளை பார்க்கும்போது இவர்கள் எந்த அளவுக்கு கண்காணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த திட்ட கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு புதிய ஆட்களை நியமிக்க தனியார் நிறுவனத்திற்கு ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!