Tamilnadu
”நுபுர் சர்மா பற்ற வைத்த தீ நாடெங்கும் வேறு வடிவில் கொழுந்துவிட்டு எரிகிறது”.. சுப.வீரபாண்டியன் விமர்சனம்
பாஜகவின் பேச்சாளரான நுபுர் சர்மா போன்றவர்கள் பற்றவைத்த தீ இன்னும் அணையவில்லை. நாடெங்கும் வேறு வேறு வடிவங்களில் கொழுந்துவிட்டு எரிகிறது என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பா.ஜ.க-வின் பேச்சாளரான நுபுர் சர்மா போன்றவர்கள் பற்றவைத்த தீ இன்னும் அணையவில்லை. நாடெங்கும் வேறு வேறு வடிவங்களில் கொழுந்துவிட்டு எரிகிறது!
கடந்த மே 26 அன்று, ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, நபிகள் நாயகம் குறித்து, நுபுர் ஷர்மா வெளியிட்ட கருத்து, இந்தியாவில் பெரும் எதிர்ப்புக்கு ஆளானதுடன், உலக நாடுகள் முன் இந்தியாவிற்கு ஒரு தலைகுனிவையும் ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 89 லட்சம் இந்தியர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இவ்வளவும் செய்துவிட்டு இப்போது தனக்குப் பாதுகாப்பில்லை என்கிறார் நுபுர் ஷர்மா!உங்களுக்குப் பாதுகாப்பில்லையா அல்லது உங்களால் நாட்டுக்குப் பாதுகாப்பு இல்லையா என்று மிகச் சரியாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் கேட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் இன்னொரு மிக முக்கியமான கேள்வியையும் கேட்டுள்ளது. நுபுர் ஷர்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறை, இன்றுவரையில் நுபூர் ஷர்மாவை ஏன் கைது செய்யவில்லை என்பதே அந்தக் கேள்வி.
தொலைக்காட்சி நெறியாளர் கேட்ட கேள்விதான் நுபுர் ஷர்மாவை அப்படிப் பதில் சொல்ல வைத்தது, எனவே அந்த நெறியாளர்தான் குற்றவாளி என்று நுபுர் ஷர்மாவின் 'புத்திசாலி' வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளார். அப்படியானால் அந்த நெறியாளர் மீது ஏன் வழக்கு பதியவில்லை என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். விடையில்லை.
இப்படி நாடே நுபுர் ஷர்மாவைக் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான், ராஜஸ்தான் உதய்பூர் மாவட்டத்தில் கன்னையா லால் என்னும் ஒரு தையல் கலைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். நுபுர் ஷர்மாவின் பதிவை அவர் மீள்பதிவு செய்தார் என்பதற்காக, அவரை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அது திமிர் என்றால், இது காட்டுமிராண்டித்தனம்.
இந்தக் கொலை, மறைமுகமாகப் பா.ஜ.க-விற்கே உதவி செய்கிறது. கன்னையாவைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அத்தர், முகமது கவுஸ் ஆகிய இருவரும், பாஜக சிறுபான்மை மோர்ச்சா பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு தகவல் இப்போது ஊடகங்களில் கசிகிறது. இது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள யாரை வேண்டுமானாலும் சங்கிகள் பலி கொடுப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை!
இவ்வாறு சுப. சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலைதான்... - காவல் ஆணையர் அருண் விளக்கம்!