Tamilnadu

பள்ளியில் சீட் வாங்கி தருவதாக ரூ. 6 கோடி மோசடி.. பா.ஜ.க நிர்வாகி மதுவந்தி மீது பரபரப்பு புகார்!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர், பா.ஜ.க நிர்வாகி மதுவந்தி மீது ரூ. 6 லட்சம் மோசடி புகார் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணா பிரசாத்தின் வழக்கறிஞர் முத்துக்குமார், "கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ண பிரசாத் நிர்வகித்து வரும் கோவியிலுக்கு நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மகள் மதுவந்தி ஆகிய இருவரும் வந்து செல்வார்கள்.

இதனால், கிருஷ்ண பிரசாத்துடன் இவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாங்கள் PSBB பள்ளியை நிர்வகித்து வருவதாகவும், பள்ளியில் சேர்க்க விரும்புவோர் தலா ரூ. 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி கிருஷ்ண பிரசாத்திடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவியிலுக்கு வரக்கூடிய 8 பேரின் பிள்ளைகளுக்கு பள்ளியில் சீட்டு கேட்டு ரூ. 19 லட்சத்தை கிருஷ்ணபிரசாத்திடம் கொடுத்துள்ளனர். இந்தப் பணத்தை அவர் மதுவந்தியிடம் அவரது இல்லத்தில் வைத்து கொடுத்துள்ளார்.

ஆனால், மதுவந்தி சொன்னபடி பள்ளியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. நீண்ட மாதங்களாகப் பள்ளியில் சீட்டு கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரால் பயந்துபோன மதுவந்தி ரூ.13 லட்சத்தைப் பணம் வாங்கிய பெற்றோர்களிடம் கொடுத்துள்ளார்.

ஆனால்,மீதி ரூ.6 லட்சத்தை மதுவந்தி தராமல் இருந்துவந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இது குறித்து கிருஷ்ண பிரசாத்திடம் பணத்தைக் கேட்டு முறையிட்டு வந்தனர். இதனால் கிருஷ்ண பிரசாத் பணம் குறித்து மதுவந்தியிடம் கேட்டுள்ளார்.

பின்னர் கடந்த மார்ச் 18ஆம் தேதி தி.நகர் பூங்காவிற்கு வரவழைத்து கிருஷ்ண பிரசாத்தை மதுவந்தி அடியாட்களைக் கொண்டு தாக்கி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரு முடிவும் இல்லை..10 நிமிடத்தில் 100 ட்விஸ்ட்.. இதுக்குதான் 10 நாளா அக்கப்போரா?