Tamilnadu

மொழி தெரியாத மாநிலத்தில் காய்கறி வாங்க சென்ற பாட்டி.. வழிமாறி 11 மணி நேரம் பரிதவிப்பு !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் வசந்தி என்ற 60 வயது மூதாட்டி. இவருக்கு ராஜேஷ் என்ற மகனும், கெளதமி என்ற மருமகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பெங்களூருவுக்கு குடியேறிவிட்டனர்.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன், மருமகளை சந்திக்க பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் அருகே கஸ்தூரி நகருக்கு சென்றுள்ளார். அங்கு கடைத்தெருவுக்கு சென்று காய்கறி வாங்கி வரும் மூதாட்டி, நேற்றும் சென்றுள்ளார்.

அப்போது வழிமாறி சென்ற அவர், தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் திணறியுள்ளார். சரி, செல்போன் மூலம் மகனை தொடர்பு கொள்ளலாம் என்று எண்ணும்போது தான், தனது மொபைல் போனையும் மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தது அவரது நினைவுக்கு வந்தது. இதையடுத்து செய்வதறியாது திகைத்த மூதாட்டி, அங்கிருந்த ஒரு பள்ளியின் வாசல் முன்பு நெடுநேரம் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில் பள்ளியின் முன்பு இந்த மூதாட்டி நீண்ட நேரம் இருப்பதாய் கண்ட பொதுமக்கள், ஒய்சாலா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரித்தனர். ஆனால் அவர்கள் மொழி இவருக்கும், இவர் மொழி அவர்களுக்கு புரியாமல் இருந்ததால், வேறு வழியின்றி மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு தமிழ் தெரிந்த ஒருவர் மூதாட்டியிடம் விசாரிக்க, தான் திருவண்ணாமலை ஆரணியை சேர்ந்தவர் என்றும், தனது மகனை சந்திக்க இங்கு வந்தபோது வழிமாறியதாகவும் தெரிவித்தார். மேலும் தனது மொபைல் போனை வீட்டில் மறந்து வைத்து வந்துவிட்டதாகவும், தனது மகனின் மொபைல் எண் தெரியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார்.

Also Read: குற்றவாளிக்கு மாநிலச் செயலாளர் பதவி கொடுத்த பா.ஜ.க.. அண்ணாமலையின் முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

இதனையடுத்து, ஆரணி காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட காவல்துறையினர், மூதாட்டி வசந்தியின் வீட்டின் முகவரியை கேட்டு, வசந்தியின் கணவர் ராஜேந்திரனிடம் இருந்து மகன் ராஜேஷின் நம்பரை வாங்கி கொடுத்தனர். பின்னர், ராஜேஷை தொடர்புகொண்ட புலிகேசி நகர் காவல்துறையினர், மூதாட்டியை பற்றி தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வந்த மகன் ராஜேஷயும், மருமகள் கெளதமியையும் பார்த்து கண்ணீர் விட்டார். மேலும் தனது மாமியார் அழுவதைக்கண்ட மருமகள், அவரை ஆர கட்டித்தழுவிகொண்டு சமாதானப்படுத்தினார். பின்னர் அவர்கள் வசந்தியை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

Also Read: கல்விக்கு எதுவும் தடையல்ல.. கணவன் மகனுக்குத் தெரியாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 53 வயது பெண்!

காய்கறி வாங்குவதற்காக சுமார் காலை 7 மணிக்கு சென்ற மூதாட்டி வசந்தி மாலை 6 மணிக்கு அவரது மகன், மருமகள் பார்த்தனர். வசந்தி 11 மணி நேரம் பரிதவிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கமல்.. என்ன தெரியுமா அது?