Tamilnadu

இனி 24x7.. அனைத்து கடைகளுக்கும் அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு: ஆனால்?

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறப்பதற்கு மீண்டும் 3 ஆண்டுகள் காலநீட்டிப்பு செய்து அதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என தமிழ்நாடு அரசு கடந்த 2019 ஆண்டு ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அனுமதியானது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுவதால் கடந்த முறை வழங்கிய அனுமதி ஜூன் 08 தேதியோடு முடிவடைந்தது.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து 24 மணி நேரமும் கடைகளை திறப்பதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு கடந்த 5 ம் தேதியிலிருந்து அமலுக்கும் வந்துள்ளது.

வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி கொடுத்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

இதன்படி 24 மணி நேரமும் செயல்படும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியவேண்டும். ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்.

பணியில் இருக்கும் ஊழியர்கள் குறித்த தகவல்கள், அனைவரின் பார்வையில் படும் இடத்தில் வைக்கப்பட வேண்டும். பணியாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தால், அதற்கான ஊதியம், அவர்களின் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டும்.

ஒரு பணியாளர், ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு, 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் தொகை வழங்கவேண்டும்.

கூடுதல் நேரமானாலும், ஒரு நாளைக்கு, 10.30 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேலாகவோ பணிபுரியக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகவோ, விடுமுறையிலோ பணியில் ஈடுபடுத்துவதும் குற்றம் இதை மீறினால், மேலாளர் அல்லது நிறுவனத்துக்குத் தண்டனை விதிக்கப்படும்

இரவு, 8:00 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது. அவசியம் இருந்தால், பெண்களிடம் எழுத்துப்பூர்வமாகச் சம்மதம் பெற்ற பின், பணியில் ஈடுபடுத்தலாம். பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்

தொழிலாளர்களுக்குக் கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Also Read: ”அண்ணாமலை கூறும் தகவல்கள் அனைத்தும் பொய்”.. அமைச்சர் முத்துசாமி பதிலடி!