Tamilnadu

வேலைதேடும் இளைஞர்களே குறி: ஸ்கெட்ச்போட்டு 60 பேரிடம் ரூ.3 கோடி சுருட்டல்: மோசடி பேர்வழி சிக்கியது எப்படி?

அரசு வேலை வாங்கித் தருவதாக வேலை தேடி வரும் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 3 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெற்றுக் கொண்டு, போலியான நேர்முகத் தேர்வுகளையும் நடத்தி, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி முகவர் கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது.

இது தொடர்பாக மோகன்ராஜ் என்பவர் மீதும், அவருடைய முகவர்கள் மீது தனசேகர் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரின் மீது துரித நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ஆணையின்படி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் மோசடியில் ஈடுபட்ட மோகன்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக ஏற்கெனவே மோகன்ராஜ் முகப்பேரில் நடத்தி வந்த வனாஸ்பையர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நேற்று (மே 23) திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர், செங்குன்றம், சென்னை தி.நகர், பாடி, பெரம்பூர் ஆகிய 5 இடங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனைகள் செய்யப்பட்டு அவற்றில் ஒரு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டு மற்ற இடங்களில் சோதனையில் குற்றத்துடன் தொடர்புடைய லேப்டாப்கள், 1 கணினி, 370 பயோடேட்டாக்கள், உண்மைச் சான்றிதழ்கள் 71, சான்றிதழ்களின் நகல்கள் 150, 3 CPU -க்கள், 400 படிவங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களின் கல்விச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியுள்ளார். இதனை அமைப்பு ரீதியாகத்தான் செல்வாக்கான நபர் என்பதைக் காட்டிக் கொண்டு, பொது மக்களை ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கின் தொடர்புடைய மோகன்ராஜ் கடந்த ஏப்ரல் மாதம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மோசடி பேர்வழிகளை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏஜென்ட்களையோ, செல்வாக்கான நபர் என்று காட்டிக்கொண்டு ஏமாற்றும் நபர்களிடமோ பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம், மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்கும் திட்டம் கிடையாது. வேலைக்காக முயற்சி செய்பவர்கள் அரசு வேலைக்காக யாரிடமும் வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: ஜூஸ் கடை→அடகு கடை: சுவற்றில் துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் அபேஸ்.. காட்பாடி அருகே மர்ம கும்பல் கைவரிசை!