Tamilnadu

”பாரபட்சமில்லாத தமிழக முதல்வரின் செயல் மனிதநேயத்தை கட்டமைக்கும் பாலமாக உள்ளது” -இலங்கை பத்திரிகை புகழாரம்

‘தமிழர், சிங்களர் என்ற பாரபட்சமின்றி அனைவரின் பசியையும் கண்டு, மனிதநேயத்துடன் உதவிய தமிழகத்திற்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி’ என இலங்கையை சேர்ந்த சிங்கள வார பத்திரிகை ‘மவுபிம’ நெகிழ்ந்து பாராட்டி உள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து இலங்கையை மீட்க, இந்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 4 கோடி கிலோ அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 உயிர் காக்கும் மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 5 லட்சம் டன் பால் பவுடர் ஆகியவை முதல் கட்டமாக அனுப்பப்பட உள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த உதவியை பாராட்டி இலங்கையில் வெளியாகும் சிங்கள வார பத்திரிகையான ‘மவுபிம’, முழுப்பக்க கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில், ‘எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மனித நேயத்தைக் கட்டமைக்கும் சேவையை இன்று தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இலங்கையில் இன்னல்களை அறிந்தவுடன் தமிழர், சிங்களவர் என்ற பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் உதவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனித நேயத்தை உயிர்ப்பிக்கும் சேவையாக பார்க்கிறோம்.

மனித இனத்தை உயர்த்தும், இந்த நிகழ்வை இனி யாராலும் மறக்க முடியாது. சிங்களர் பசி கண்டு மனிதநேயத்துடன் உதவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாட்டு சகோதரர்களுக்கும் நன்றி. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மனிதநேயத்தை கட்டமைக்கும் பாலமாக இந்த நிவாரண உதவிகள் அமைந்துள்ளன,’ என்று புகழாரம் சூட்டி உள்ளது.

Also Read: "ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம்": தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!