Tamilnadu
50 ரூபாய் தராததால் மனைவிக்கு 6 முறை கத்திக்குத்து.. கணவனின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்!
கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக, மனைவி தெய்வானையிடம் தகராறு செய்வதை வாடிக்கை வைத்திருந்த நிலையில், மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஒத்தக்கல் மண்டபம் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த மனைவியிடம் குடிப்பதற்கு 50 ரூபாய் கேட்டுள்ளார். அதனை தர மறுத்த மனைவி தெய்வானையை நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் ஆறு முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் தனக்குத் தானே வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
தெய்வானையின் அலறல் சத்தம்கேட்டு அங்கு சென்ற தெய்வானையின் சகோதரியும், அவரது கணவரும், தற்கொலைக்கு முயன்ற முத்துசாமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் முத்துசாமி மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தினர் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் முத்துசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2010ல் தீர்ப்பளித்தது. இதை தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துசாமி மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முத்துசாமி தரப்பில், மனைவி கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் இருவரும், உறவினர் என்பதால் அவற்றை ஏற்க கூடாது என்றும், உள்நோக்கத்துடன் கொலை செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது.
ஆனால் காவல்துறை தரப்பில், குடிப்பதற்கு பணம் தராதரால் கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆறு முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள நிலையில், உள்நோக்கம் இல்லாமல் வேகத்தில் செய்த கொலை என கூறுவதை ஏற்கமுடியாது என்றும், குடிப்பழக்கம் காரணமாக தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என சொந்த பிள்ளைகளே சாட்சியம் அளித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டி, முத்துசாமிக்கு கோவை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதிசெய்தும், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!