Tamilnadu

“எந்த அபாயகரமான திட்டத்தையும் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டார் முதல்வர்” : அமைச்சர் மெய்யநாதன் உறுதி!

மண்ணை மலடாக்கும் எந்த அபாயகரமான திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், “தி.மு.க ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் 1,164 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலங்களில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அரியலூர் மற்றும் கடலூரில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மண்ணை மலடாக்கும் எந்த அபாயகரமான திட்டத்துக்கும் முதலமைச்சர் அனுமதி அளிக்கமாட்டார்.

நடப்பாண்டில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் கடற்கரைகளை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் நெய்தல் நகர் கடற்கரையும், ராமநாதபுரம் மாவட்டம் குஷி கடற்கரையும் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் சுற்றுச்சூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும். நெகிழிப் பொருட்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு நெகிழிப் பயன்பாடுகளைத் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: "நேரம், காலம் பார்க்காமல், உணவை, ஓய்வை, தூக்கத்தை மறந்து உழைக்கிறோம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!