Tamilnadu

கோடை காலத்தில் வன விலங்குகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாடு... குவியும் பாராட்டு!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல், மதுக்கரை வரை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. இந்த மலையை ஒட்டி அமைந்துள்ள புதர்க்காடுகள் இயற்கையாகவே அமைந்துள்ளது. வனவிலங்குகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதால் இங்கே யானை, புள்ளி மான்கள், கடமான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள் மற்றும் புலிகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

இதில் குறிப்பாக, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனப்பகுதிகளில் பவானி ஆறு ஓடுவதால் காடுகளில் அடர்த்தி குறையாமல் இருப்பதாலும் தென்னிந்திய யானைகளுக்கு ஏற்ற சூழல் உள்ளதால், டிசம்பர் மாதம் முதல், ஜூன் மாதம் வரை இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

கடந்த மார்ச் மாதம் முதல், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் காடுகளில் உள்ள இயற்கையான நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியே வரும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வனப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் காட்டுத்தீ பரவாமல் தடுப்பது தொடர்பாகவும், நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வனப்பகுதிகள் மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதனால், வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் விலங்குகளுக்கு தேவையான குடிநீர் வழங்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில், 18 இடங்களில் செயற்கை தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் சிறுமுகை, காரமடை பெரியநாயக்கன்பாளையம், ஆனைகட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அங்கு லாரிகள் மூலமாகவும், ஆழ்துளை கிணற்றில் இருந்தும் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பி, வனவிலங்குகள் கோடை காலம் முடியும் வரை குடிநீர் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் இந்த தீவிர நடவடிக்கையை பொதுமக்களும், வனத்துறையினரும் பாராட்டியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் பழனிராஜா பேட்டியின்போது கூறுகையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தை பொறுத்தவரை, கோடை மழையால் இந்த வனப்பகுதி குளிர்ச்சி அடைந்து பசுமையாக காட்சியளிக்கின்றது. வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவுகள் வனத்திற்குள் கிடைப்பதால், ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டதோடு, இந்த ஆண்டு தீ பரவல் போன்றவைகள் வனப்பகுதியில் நடக்காமல் தடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வனத்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக கூறிய, வன ஆர்வலர் கந்தசாமி கூறுகையில், “கோடை மழை பெய்துள்ளதால் வன விலங்குகள் விளை நிலங்களுக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடை மழையால் மீண்டும் பசுமை திரும்பியுள்ளது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக உள்ளது. வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை, வழங்கி வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருவது சிறப்பிற்குரியது, பாராட்டுதலுக்குரியது” எனக் கூறினார்.

Also Read: “என்னுடைய Team தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக மாற்றும்”: அவையில் முதல்வர் சொன்ன வாக்குறுதி!