Tamilnadu

சினிமா பாணியில் IT ரெய்டு.. 160 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பல்: ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய போலிஸ்!

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதியன்று 5.30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது காரில் வந்தவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் காரில் வந்து இறங்கி உள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த பாலமுருகனிடம், செங்கல் சேம்பர் தொழிலும் செய்து வருவதால் தாங்கள் தற்போது வாங்கிய செங்கல் சேம்பரை எந்த வருமான அடிப்படையில் வாங்கினீர்கள் எனக் கேட்டு, அதற்கான பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி அது குறித்து விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், அதற்கெல்லாம் வருமான வரி செலுத்தியது குறித்து கேட்டுவிட்டு வீட்டிலுள்ள நகை பணத்தை கொண்டு வரச்சொன்னதால் வீட்டிலிருந்த 200 சவரன் நகை 2 லட்சம் பணம் மற்றும்‌ சொத்து பத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து 20 நிமிடத்தில் விசாரணை முடிந்ததாக கூறி 200 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான எந்த ரசீதும் தராமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் செவ்வாப்பேட்டைகாவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல் துணை ஆணையர் மகேஷ் மற்றும் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளையர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாக தெரிந்த நிலையில், காவல்துறையினர் விரைந்து சென்று கொள்ளையர்களை சுற்றி வளைத்ததில் ஒரு பெண் உட்பட்ட 12 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர்

முதற்கட்ட விசாரணையில் கோவை பொள்ளாச்சி பகுதியை சார்ந்த ரெனிஸ் (46), பார்த்தசாரதி (45), நூறுலாஸ்கர் (46), பிரவீன்குமார் டேனியேல் (55), வினோத்குமார் (42), நீலகிரியை சார்ந்த சிவமுருகன் (52) ,நந்தகுமார் (39) , மேட்டுப்பாளையத்தை சார்ந்த பிரகாஷ் (29), கவிதா (30), பெங்களூரை சார்ந்த வெங்கடேசன், திருவள்ளூர் வெள்ளாக்குளம் சார்ந்த வசந்தகுமார் (39), திருநின்றவூர் பகுதியை சார்ந்த செந்தில்குமார் (42) ஆகிய 12 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Also Read: 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள்.. பா.ஜ.க vs காங்கிரஸ் இடையே கடும் போட்டி : முன்னணி நிலவரம்!