Tamilnadu

“மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா” : தாய் தந்தையின் நெகிழவைத்த செயல் - குவியும் பாராட்டு!

விருத்தாசலத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு பெற்றோர்களே மஞ்சள் நீராட்டு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா எனும் தம்பதியினரின் மகன் நிஷாந்த் (21). இவரது தந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாகவும், அவரது தாய் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் சமரசம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்து, உணர்வுக்கு மதிப்பளித்து, மகனின் பெயரை நிஷா என மாற்றியுள்ளனர்.

பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.

அவர் வீட்டை வெளியேறிய நாளான மார்ச் 1 அன்றே அவருக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி மகிழ்வித்துள்ளனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நிஷாவின் பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். திருநங்கைக்கு குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா செய்திருப்பது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம்?” : கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!