Tamilnadu

பழைய வழக்குகளை தூசித்தட்டியதில் ஹேர் ஸ்டைலால் சிக்கிய திருட்டு கும்பல்; சென்னை போலிஸார் அதிரடி!

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பணம், பொருட்கள், தங்கநகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவக்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு நகை திருடு போன இந்த வழக்கில் அப்போது கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து அதனை குற்றவாளிகள் பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்த பொழுது பழைய குற்றவாளி ரூபன் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ரூபன் (வயது 23) மற்றும் அவரது கூட்டாளிகள் கேகே நகர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் கே.கே.நகர் பகுதிக்கு சென்ற போலிஸார் ரூபன் மற்றும் அவரது கூட்டாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சிசிடிவி காட்சியில் இருந்த பிரதான குற்றவாளியின் ஹேர் ஸ்டைலை வைத்து ரூபனை கைது செய்திருக்கிறார்கள். மேலும், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதோடு, திருடிய 4 சவரன் நகைகளையும் மீட்டுள்ளனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வழக்கை முடித்து நகைகளை மீட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

Also Read: FaceBook-கில் வெளியான புகைப்படம்.. அதிர்ச்சியில் மாணவி எடுத்த விபரீத முடிவு: நடந்தது என்ன?