Tamilnadu

போலி சான்றிதழ் வழங்கி பல லட்சம் பண மோசடி.. தீயணைப்பு வீரர் கைது - போலிஸ் அதிரடி நடவடிக்கை !

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டுதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்காக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி சரவணபாபு தனியார் மருத்துவமனையில் தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏற்கனவே உள்ள கட்டடத்துக்கு வாங்கிய தடையில்லா சான்றிதழ் குறித்த விவரங்களை சரிபார்த்ததார்.

அப்போது, அந்தசான்றிதழ் போலியானது என்பதை அறிந்து அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார். இதேபோன்று நாகர்கோவிலில் உள்ள ஒரு வணிக வளாகத்தையும் ஆய்வு செய்தபோது, போலியாக தடையில்லா சான்று புதுப்பித்து வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் இந்த சான்றிதழ் மோசடி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜ் என்பவர்தான் தடையில்லா சான்று பெற்று கொடுத்தது தெரியவந்தது. இவர் சென்னை ராஜ்பவன் அருகே உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.

மேலும் சுந்தர்ராஜ், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குப் போலியான தடையில்லா சான்றிதழ்கள் கொடுத்தது பல லட்சம் பண மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் சுந்தர் ராஜை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தஞ்சையில் இருந்து தப்பிய குற்றவாளி.. டோல்கேட்டில் பிடிக்க முயன்ற போலிஸ் மீது காரை ஏற்றிய கும்பல்!