Tamilnadu

வேடந்தாங்கல் சரணாலய பரப்பை குறைத்த அதிமுக அரசு; முடிவை கைவிட்ட திமுக அரசு - வனத்துறை அறிவிப்பு!

வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களுக்குத் திறந்து விடப்படும் அபாயம் ஏற்பட்டது.

சரணாலயத்தின் 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை பாதுக்காக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும், நிலப்பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும்.

பறவைகள் சரணாலய பரப்பளவை சுருக்குவதற்கான காரணங்களாக ஜனவரி மாதம் ஒன்றிய அரசுக்கு அளித்த விண்ணப்பத்தில் தமிழக அரசு சொல்லியவை:

கட்டுமானங்களை கட்ட முடியாத காரணத்தால் உள்ளூர் மக்களை பறவைகள் சரணாலய பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் ஈடுபடுத்த முடியவில்லை. ஏரியைச்சுற்றி முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள விநாயகநல்லூர், சித்தாதூர், பசும்பூர், வேடவாக்கம், வளையபுதூர், அண்டவாக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே தற்போது விவசாயம் நடப்பதாகவும் 3 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் விவசாயம் கைவிடப்பட்டதால் அங்கு பறவைகள் வருவதில்லை.

அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது. இதனைத் தடுக்கவே சரணாலய பரப்பை குறைப்பதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்திருந்தது.

Also Read: “₹1 கோடி மதிப்பிலான முந்திரி லாரியை கடத்திய வழக்கு..” : அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டாஸ்!