Tamilnadu

உடைந்த கரையை மணல் மூட்டை அடுக்கி உடனே சீரமைப்பு.. நள்ளிரவு கொட்டும் மழையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி கோரையாற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அது உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு வழியாக சென்று காவிரியில் கலக்கிறது.

இந்த நிலையில் திருச்சி வயலூர் சாலையில் உள்ள உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆற்றில் நீர் நிறைந்து செல்வதால், கரையில் உடைப்பெடுத்து ஆதிநகர், பாத்திமா நகர், நோவா நகர், ஆர்.எஸ். புரம், ஏ.யூ.டி. நகர், பெஸ்கி நகர் தியாகராஜநகர், லிங்கா நகர், மங்கம்மாள் நகர், செல்வ நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்திடும் வகையில் கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து இரவோடு இரவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று இரவு 10 மணிக்கு கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களைப் பாதுகாத்திடும் வகையில் கண்காணிப்புடன் பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுப்பணியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாநகரச் செயலாளர் அன்பழகன்,நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் மணிமோகன், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி, சிவபாதம் பகுதி செயலாளர் இளங்கோ, மற்றும் பலர் உடன் இருந்தனர். திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றில் நீர் நிறைந்து உடைந்த கரையை உடனே சரிசெய்ப்பட்டதைக் கண்டு அப்பகுதி மக்கள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!