Tamilnadu

கிணற்றில் விழுந்த பசுமாடு.. மாட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த விவசாயி பரிதாப பலி : நாமக்கல்லில் சோகம்!

நாமக்கல் மாவட்டம், காணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன். இவரது மனைவி ராசம்மாள். இந்த தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் பசுமாடு ஒன்றையும் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சீரங்கன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த காவேரி என்பவரின் கிணற்றில் பசு மாடு ஒன்று விழுந்து இறந்து கிடப்பதாகத் தகவல் பரவியது. இதுகுறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றிலிருந்து பசுமாட்டை மீட்டனர். அப்போது இறந்த மாடு சீரங்கனுக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. மேலும் கிணற்றில் செருப்பு ஒன்றும் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கித் தேடிப்பார்த்தனர். அப்போது சடலம் ஒன்று இருந்தது. அதை வெளியே எடுத்து பார்த்தபோது, இறந்தவர் காணாமல் போன சீரங்கன் என தெரியவந்தது.

இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், பசுமாடு தவறி கிணற்றுக்குள் விழுந்தபோது, அதை காப்பாற்றும் முயற்சியில் சீரங்கனும் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Also Read: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. துணிச்சலுடன் 5 பேரை மீட்ட இளைஞர்: திக்திக் நிமிடங்கள்!