Tamilnadu

பூர்வகுடிகளுக்கு தீபஒளித் திருநாள் பரிசு கொடுத்த முதல்வர்: தனது செயல் மூலம் பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும் அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் ஒருவர் அண்மையில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலில் ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில், முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு. பின்னர் அவர்களுக்கு தீபஒளித் திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார். பின்னர் அஸ்வினி என்ற பெண்ணை அழைத்து உங்கள் பகுதியில் எதாவது குறைகள் உள்ளதா என கேட்டார்.

அப்போது, அந்தப் பெண் எங்கள் பகுதியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் என மொத்தம் 81 குடும்பங்கள் 25 ஆண்டுகளாக மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் இல்லை. அதேப்போல், சாலை வசதியோ, குடிநீர் வசதியோ மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகிறோம் என அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பணிகளும் ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டுமென அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைத்தல், மின் கம்பம் அமைத்தல், தெருக்கு தெரு குடிநீர் தொட்டி அமைத்தல், மின் விளக்கு பொருத்துதல், செடி-கொடிகள் அடர்ந்த இடங்களை பொக்லைன் மூலம் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நரிக்குறவர் பகுதியை பார்வையிட்டு 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும் இருளர் இன மக்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக தீபஒளித் திருநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆனால் முதலமைச்சரோ செயல்மூலம் பூர்வகுடிகளுக்கு தீபஒளித் திருநாள் பரிசுகளை வழங்கி மீண்டும் பதிலடிகொடுத்துள்ளார். விமர்சனங்களை தள்ளிவிட்டு செயல்வடிவங்களில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தமிழ்நாடு நாள்: ”அண்ணா பெயரில் கட்சி நடத்தி அண்ணாவுக்கே துரோகம் செய்யும் அதிமுக” - முரசொலி கடும் தாக்கு!