Tamilnadu

நம்பர் பிளேட்களில் விதிமீறல்.. களத்தில் இறங்கிய போலிஸ்: இரண்டே நாட்களில் 6ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் விதிகளை மீறி நம்பர் ப்ளேட் வைத்திருந்த சுமார் 6 ஆயிரம் பேர் மீது கடந்த 2 நாட்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும், முறைகேடுகளை தவிர்க்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விதமான புதிய விதிகளை அமல்படுத்தியும், திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகின்றன.

வாகனங்களின் நம்பர் பிளேட்களில் உள்ள எழுத்துகள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும். பிற வாசகங்கள், சின்னங்கள், அல்லது படங்கள் நம்பர் பிளேட்களில் ஒட்டவும், எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபகாலமாக, அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி நம்பர் பிளேட் பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் நம்பர் பிளேட்களை பொருத்தியும், பொதுமக்களில் சிலர் அரசு வாகனம் (G),காவல் (Police) வழக்கறிஞர், (Advocate) பத்திரிகை மற்றும் ஊடகம் (Press-Media) போன்று பல துறையை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து காவல் துறைக்கு வந்த புகார்கள் வந்தன.

இதனையடுத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலிஸார் வாகன சோதனை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு வாகன சோதனை செய்து, வாசகங்கள், சின்னங்கள், படங்கள் மற்றும் அரசு நிர்ணயித்த அளவுகளில் இல்லாமல், நம்பர் பிளேட்கள் பொருத்தி வந்த 2,343 வாகன ஓட்டிகள் மீது நேற்று முன்தினம் (அக்., 26) வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டு நாட்களில் சுமார் 6,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோட்டார் வாகன விதிகளின்படி இல்லாமல், குறைபாடுகளுடன் நம்பர் பிளேட்கள் பொருத்தி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அரசு நிர்ணயித்துள்ள அளவுகளில் நம்பர் பிளேட்களை பொருத்தியும், தேவையற்ற வாசகங்களை நீக்கம் செய்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை.. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்: நடந்தது என்ன?