Tamilnadu
காணாமல் போனதாக தேடப்பட்டவர் சுடுகாட்டில் கொலை... நண்பர்கள் சரண்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
குன்றத்தூர் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது மனைவி, குன்றத்தூர் போலிஸில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலிஸார் அவரது நண்பர்களிடம் விசாரிக்க முயன்றபோது, தலைமறைவான அவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அப்போதுதான் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்த வருண் (19), விக்னேஷ் (21), பிரவீன்குமார் (21), கோவிந்தராஜ் (23) ஆகியோரை நேற்று போலிஸ் காவலில் எடுத்து குன்றத்தூர் போலிஸார் விசாரித்தனர்.
அப்போது குன்றத்தூர், நத்தம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சிலம்பரசனை கொலை செய்து புதைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான ரவி என்ற சிக்கா ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் குன்றத்தூர் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, கொலையாளிகள் அடையாளம் காட்ட, கொலை செய்யப்பட்ட சிலம்பரசன் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து உடலை தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
விசாரணை குறித்து போலிஸார் கூறுகையில், “சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி என்ற சிக்கா ரவிச்சந்திரன் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இவர் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இவருக்கும் சிவா என்பவருக்கும் இடையே தொழில் போட்டியால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சிவாவும், சிலம்பரசனும் நண்பர்கள் என்பதால் சிலம்பரசன் மூலமாக ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ரவிச்சந்திரன், சிலம்பரசனை நைசாக பேசி அழைத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே புதைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளனர்.
தொழில் போட்டியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!