Tamilnadu

எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் ரெய்டு.. பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறியில் கூட்டுறவுசங்கத் தலைவரும், அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகருமான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருப்பவர் இளங்கோவன். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரி துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து முசிறியில் இயங்கிவரும் MIT வேளாண் பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி, கல்லூரியின் செயலாளர் ஆதித்யா, சுவாமி ஐயப்பன் அறகட்டளை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான ஆவணங்கள் கைப்பற்ற பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸ் டி.எஸ்.பிகள் ராஜு, மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் போலிஸார் 27 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? - அதிரவைக்கும் FIR தகவல்!