Tamilnadu

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, ஆபாசப்படம் எடுத்து மிரட்டல் ... பெண்களை சீரழித்த போலி இயக்குநர் கைது!

சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து வந்து விடுதியில் ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்த போலி இயக்குனர் இமானுவேல் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டியை சொந்த ஊராகக் கொண்டு ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் இமானுவேல் ராஜா என்பவர் சினிமா எடுப்பதாகக் கூறி அந்தப் பகுதியில் பலரிடம் ஏமாற்றி வந்துள்ளார். அதை உண்மையென்று நம்பிய பல வாலிபர்களும், இளம்பெண்களும் அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்துள்ளனர்.

அவர்களிடம், புகைப்படம் அனுப்புமாறும் பணம் அனுப்புமாறும் வாங்கி வந்துல்ளார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அவர்களை அடிக்கடி அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

வாய்ப்புத் தேடி வரும் இளம்பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி வரழவைத்து, முதலில் இப்படி ஆபாசமாக நடித்தால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய சில பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்துள்ளார்.

பின்னர் அந்தப் படத்தை அவர்களிடம் காட்டி, இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் அவற்றை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும், அவர்களுடன் தொடர்ந்து அவர்களை பாலியல் ரீதியாகவும் சீரழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் லோகேஷன் பார்ப்பதாக தனுஸ்கோடிக்கு சென்ற இமானுவேல் ராஜா, அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்த காத்திக் ராஜா என்பவரை சந்தித்து, தான் திரைப்பட இயக்குநர் சக்தி என்றும், தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும் அதில் பூசாரி வேடத்திற்கு ஆள் தேவை என்றும் சம்பளமாக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய கார்த்திக் ராஜா, தன் மனைவியையும் நடிக்க வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு இமானுவேல் ராஜா, படம் எடுக்க பணம் குறைவாக உள்ளது. நீங்கள் முன்பணமாக 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் படம் வெளியானதும் சம்பளத்துடன் இந்தப் பணத்தையும் சேர்த்து கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய கார்த்திக் ராஜா, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, இமானுவேல் ராஜா ஆடிஷனுக்கு வரச் சொல்லியுள்ளார். அங்கு சென்றபோது, பெண் ஒருவர் கார்த்திக் ராஜாவிடம் தனியாக அழைத்து இமானுவேல் ராஜாவின் மோசடிகள் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கார்த்திக் ராஜா தனது பணத்தை திரும்பப் பெற இமானுவேல் ராஜாவின் அறைக்கு சென்றபோது, அங்கு மேஜையில் கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனால், அச்சமடைந்த அவர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

க்யூ பிரிவு போலிஸார் இமானுவேல் ராஜாவை தேடி நட்சத்திர விடுதிக்கு சென்றனர். போலிஸார் வருவதை அறிந்த இமானுவேல் ராஜா அறையை காலி செய்து விட்டு தப்பினார். பின்னர் போலிஸார் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையத்தில் இமானுவேல் ராஜாவை கைது செய்து, கைத்துப்பாக்கியை சோதனை செய்தததில், அது சிகிரெட் பற்றவைக்கும் லைட்டர் என்பது தெரியவந்தது.

பின்னர் இமானுவேல் ராஜாவை க்யூ பிரிவு போலிஸார் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்டுகள், காசோலைகள், கவரிங் செயின், கவரிங் தோடு ஒரு ஜோடி, ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Also Read: மேட்ரிமோனியில் அறிமுகமாகி ரூ.1.25 லட்சம் மோசடி.. டிமிக்கி கொடுத்த இளைஞரை வெளுத்தெடுத்த இளம்பெண்!